மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்துவதைப் பற்றிய சமீபத்திய சர்ச்சை பற்றி விவரி?

 

In the light of recent controversy regarding the use of Electronic Voting Machines (EVM), what are the challenges before the Election Commission of India to ensure the trustworthiness of elections in India? (UPSC 2018)  

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்.) பயன்படுத்துவதைப் பற்றிய சமீபத்திய சர்ச்சையின் வெளிப்பாடாக, இந்தியாவில் தேர்தல் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் சவால்கள் எவை?(UPSC 2018)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்


மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) சில நாடுகளில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் வாக்கைப் பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் கருவியாகும். பதிவான தகவல்களைச் சேமித்து வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். தற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

உபயோகிக்கும் முறை


இந்த இயந்திரம், கட்டுப் பாட்டு கருவி், ஓட்டுப்பதிவு கருவி என இரு பகுதிகளைக் கொண்டது. கட்டுப்பாட்டு கருவி மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு கருவி வாக்காளர் ஓட்டளிக்கும் மறைவான இடத்திலும் இருக்கும். இந்த இரு கருவிகளும் பத்து மீட்டர் நீளமுள்ள மின்னிணைப்பு வடம் (கேபிள்) மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக்கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத்தானை மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய்யத்தயாராகும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

 

சிறப்பு அம்சங்கள்

 

ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான மண்டல அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் ‘மெமரி’யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் ‘முடிவு’ பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற்கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும். ‘முடிவு’ பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும். இதனால், முத்திரை இடப் பட்ட பட்டையிலோ, காகித்திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், ‘முடிவு’ பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில்அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும். ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

 

கட்டுரை எண் 2

 

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுவதாக இந்த தேர்தலிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

”வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரியாக கையாள முடியாமல் குழப்பத்தில் இருந்தால் வேறொரு புது இயந்திரத்தை அங்கு வைப்பார்கள். இயந்திரம் என்றைக்கும் தவறாக வேலை செய்யாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பே கிடையாது” என உறுதியாகச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

”இயந்திரத்துக்கு பொய் சொல்லத் தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு இயந்திரம் மீது ஏன் குற்றச்சாட்டு வருகிறதெனில் இயந்திரத்தின் மீது பழி போட்டால் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

மேலும் இயந்திரத்தின் மீது எளிதாக பழி போடலாம் என்பதே முக்கிய காரணம். ஆகவே கட்சிகள் பலவீனமான நிலையில் இருக்கும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது பழி சுமத்துகிறார்கள். உண்மையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன” என விளக்குகிறார் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்.

இந்தியாவே உருவாக்கிய, இந்தியா பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எனச் சொல்லும் கிருஷ்ணமூர்த்தி, இவ்வியந்திரத்தை பலர் குற்றம்சாட்டி குழப்பத்தை உண்டாக்குகிறார்கள் என்றும் கூறுகிறார்.

தன்னைப் பொறுத்தவரையில் இக்குற்றச்சாட்டு தவறு என்றும், நீதிமன்றத்திற்கு இவ்விவகாரம் குறித்து சென்றவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

 

தேர்தல் ஆணையத்தின் சவால்

 

மின்னணு இயந்திர முறைகேடுகள் குறித்து எங்களது இடத்திற்கு வந்து நிரூபியுங்கள் தொழில்நுட்ப நிபுணர் ஒருவரை வைத்து அதனை சரிபார்க்கிறோம் என தேர்தல் ஆணையம் ஒரு சவால் விடுதிருந்திருந்தது. ஆனால் ஒருவரும் வரவில்லை. ஆகவே இக்குற்றச்சாட்டுகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என எனக்கு தோன்றவில்லை” என்றார்.

 

மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விதமாக மின்னணு இயந்திரத்தில் வாக்களித்தவுடன் ஒரு ரசீது அவர்களுக்கு கிடைக்கும் வசதியானது இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை அனைத்து தேர்தல்களிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமல்படுத்தப்படவில்லை. ஆகவே வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து சிலருக்கு சந்தேகம் எழுகிறது.

‘’இந்த ரசீது வழங்கும் வசதி இல்லாமலேயே நாங்கள் தேர்தல்களை நடத்தியிருக்கிறோம். இவ்வசதியை அனைத்து தேர்தல்களிலும் அடுத்தடுத்து பயன்படுத்துவதற்காக உரிய இயந்திரங்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் கர்நாடக தேர்தலில் இந்த வசதிகள் எவ்வளவு மையங்களில் பயன்படுத்தப்பட்டது எனச் சரியாக தெரியவில்லை.

இது ஒரு குற்றச்சாட்டு எனச் சொன்னால் என்ன செய்வது? நாங்கள் இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்கிறோம். அவர்கள் செய்ய முடியும் என்கிறார்கள். ஆனால் நிரூபித்தும் காட்டுவதில்லை. இது போன்ற நிலைகளில் இக்கட்சிகள் ஒரு சாக்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன என்றே தோன்றுகிறது” என விவரித்தார் கிருஷ்ணமூர்த்தி.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு முறை கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சமீப சில வருடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வைக்கப்படுகிறது. ஏன் திடீரென இக்குற்றச்சாட்டுகள் அதிகரித்தவண்ணம் உள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி,

”கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது. தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் இல்லாதபோது காட்சிகள் இக்குற்றச்சாட்டை வைக்கின்றன. அவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பல முறை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பலன் இல்லை.”

” ஒவ்வொரு முறையும் தேர்தலில் தோற்பவர்கள் இக்குற்றச்சாட்டை வைக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்திலோ, தேர்தல் ஆணைய அலுவலகத்திலோ அவர்கள் நிரூபித்துக் காட்டலாம். அதை அவர்கள் செய்வதே இல்லை.” என்கிறார்.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் நிறைய நன்மைகள் உள்ளன. வாக்குசீட்டு முறையில் போலி ஓட்டு போடமுடியும்; போட்டிருக்கிறார்கள். மதிப்பில்லாத ஒட்டு செலுத்தவும் முடியும். ஆனால் இவை மின்னணு இயந்திரத்தில் சாத்தியமில்லை.”

“மேலும் தேர்தலை விரைவாக நடத்தி விரைவாக முடிவை அறிவிக்க முடிகிறது. இது வாக்குச்சீட்டு முறையில் சாத்தியமல்ல.”

“மின்னணு வாக்குப்பதிவு முறையால் காகிதங்கள் பெருமளவு சேமிக்கப்படுகிறது. டன் கணக்கில் காகிதங்கள் சேமிக்கப்படுகின்றன” என விவரித்தார் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

 

கட்டுரை எண் 2

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்… தேர்தல் கமிஷன் முக்கியத் தகவல்!

 

 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு எதிர்க்கட்சிகள், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளன. யாருக்கு வாக்கு செலுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு வாக்கு பதிவாகும்படி அது வடிவமைக்கப்பட்டு  உள்ளது’ என்று குற்றம் சாட்டின. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. சில கட்சிகள் இதற்கும் ஒருபடி மேலே போய், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருக்கும் எனப் பரவலாக புகார்கள் வருவதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.’ என்றும் தெரிவித்தன.

 

 

இந்நிலையில்தான் தேர்தல் கமிஷன், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையில் குறை இருக்கும் என்று சந்தேகிக்கும் கட்சிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்யலாம்’ என்று கூறியிருந்தது. இதையடுத்து அதற்கான நிகழ்ச்சியை நேற்று  ஒருங்கிணைத்திருந்தது தேர்தல் கமிஷன். ஆனால் இந்த சோதனை செய்யும் நிகழ்ச்சியில் தேசிய அளவில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே பங்கேற்றன.

அந்தக் கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்யாமல் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டன. 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி, ‘இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. அதில் எந்தவித கோளாறுகளும் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது. இனிமேல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்ய எந்தவித சவால்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. இன்று சோதனை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு கட்சிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி வேலை செய்யும் என்பதைப் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது.’ என்று கூறினார்

 

கட்டுரை எண் 4

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3 முதல் எதிர்கொள்ளத் தயார்: தேர்தல் ஆணையம்

 

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த செயல்முறை விளக்கம் முடிந்தவுடன் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வித குளறுபடியும் செய்ய முடியாது. அவற்றின் இன்டர்னல் சர்க்யூட்டை மாற்றியமைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அரசியல் கட்சிகள் இதுவரை தேர்தல் ஆணையத்தில் வலுவான ஆதாரம் ஏதும் அளிக்கவில்லை. இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் விவிபிஏடி கருவி பயன்படுத்தப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார்” என அறிவித்தார்.

 

பகுஜன், ஆம் ஆத்மி குற்றச்சாட்டு:

 

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார் என தலைமைத் தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை முன்வைத்தன.

இதனையடுத்து கடந்த 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை எதிர்கொள்ள தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

 

கட்டுரை எண் 5

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம்: கேஜ்ரிவால்

 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தொடர்ந்து, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆளும் சமாஜ்வாதி, எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்த முறைகேடு காரணமாகவே பாஜக வெற்றி பெற்றது என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், டெல்லியில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழைய முறைப்படி வாக்குச் சீட்டு பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதும்படி மாநில தலைமை செயலாளர் எம்.எம்.குட்டிக்கும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜெய் மாக்கானும், உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் கேஜ்ரிவாலிடம் வலியுறுத்தி இருந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர் ஜர்னெயில் சிங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர், ”தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதே சமயம் பஞ்சாப் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஆம் ஆத்மி தொண்டர்கள் அதிகம் நிறைந்த தொகுதிகளில், அந்த எண்ணிக்கையை விட குறைந்த வாக்குகளே எங்களுக்கு பதிவாகி இருக்கின்றன” என்றார்.

 

 

கட்டுரை எண் 5

 

வாக்குச்சீட்டுக்கு திரும்பலாமா?

 

ட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி அடையும் கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் சமீபத்திய ஒன்று மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி என்பதாக உள்ளது.

எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது ஒரே வேட்பாளருக்கே செல்லும்படி சதி செய்யப்பட்டிருக்கிறது, செல்போன் அலைவரிசை மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பன உள்ளிட்ட விமர்சனங்கள் அதில் உள்ளடங்குகிறது.

 

அண்மையில் நடந்து முடிந்து உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு பிறகு இந்த குற்றச்சாட்டுகள் பரவலாக பேசப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தொடர்ந்து தற்போது 16 கட்சிகள் இந்த அணியில் சேர்ந்துள்ளன. இந்நிலையில், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே செல்வது அவசியம்தானா என்ற வாதவிவாதங்கள் எழுந்துள்ளன.

கட்சிகளின் கோரிக்கையை அலசுவதற்கு முன்னதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி முன்வைத்துள்ள கருத்தைப் பார்ப்போம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதை நிறுத்துவீர்:

கோபால்சாமி “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மென்பொருள் மிகவும் பாதுகாப்பானது. அதில் முறைகேடு செய்வது என்பது சாத்தியமற்றது. மொபைல் போன் சமிக்ஞைகள் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை மாற்றியமைத்தல் என்பதற்கு சாத்தியமே இல்லை.

நேர்மையான வெளிப்படையான தேர்தலை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றமே உறுதி செய்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்னதாக அந்தந்தப் பகுதி தேர்தல் அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் டம்மியாக வாக்குகளை பதிவு செய்து பரிசோதனைக்கு உட்படுத்தியே பின்னரே அவற்றை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

இத்தகைய விரிவான சோதனைகளுக்குப் பின்னரும்கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது தோல்வியடைந்த வேட்பாளரின் நொண்டி சாக்காக மட்டும்தான் இருக்க முடியும்” இவ்வாறு கோபால்சாமி கூறியிருக்கிறார்.

 

ஜெ. எழுப்பிய முதல் எதிர்ப்பு:

 

கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

பலருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் தேர்தலில் பல குழப்பங்கள் ஏற்படும். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் முறைகேடு சாத்தியம் என்பது தொடர்பாக கணினி பொறியாளரிடம் பெறப்பட்ட தகவல்களையும் மனுவில் இணைத்திருந்தார்.

மேலும், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளாததை சுட்டிக் காட்டியிருந்தார்.

 

பாதி தொகுதியில் வாக்குச்சீட்டு முறை சரிவருமா?

 

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதை உறுதி செய்யும் வகையில் பாதி தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மீதி தொகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் வாக்குப்பதிவு நடத்தி, முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என காங்கிரஸ் முன்மொழிந்தது.

ஆனால், இவ்வாறாக பாதி தொகுதிகளில் மட்டும் வாக்குச்சீட்டு மீதி தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது நேர விரயம், மக்கள் மத்தியில் குழப்பம், தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் பளு ஆகியனவற்றுக்கே வழிவகுக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

 

மம்தாவின் எதிர்ப்பு:

 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாட்டுக்கு எதிராக வலுவான குரல் எழுப்பியிருக்கிறார். முழுமையாக பழைய நடைமுறையான வாக்குச் சீட்டுக்கு மாறுவதே சிறந்தது என்பது அவரது வாதமாக இருக்கிறது.

16 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள நிலையில், தேர்தலில் தாங்கள் அளித்த வாக்கு யாருக்கு பதிவாகியுள்ளது என்பதை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இது சாத்தியமில்லை. வாக்குச்சீட்டுகளில் மட்டுமே எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களால் அறிந்து கொள்ள முடியும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அவற்றுக்கு விடை கொடுத்து விட்டு, இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.

கட்சிகளின் வாதத்துக்கு ஏற்ப மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மாறுவது என வைத்துக் கொள்வோம். அப்போது மட்டும் ஆளுங்கட்சியோ அல்லது மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியோ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குச்சீட்டுகளை மாற்றி வைக்கமுடியாதா அல்லது வாக்குச்சீட்டுகள் உள்ள பெட்டிகளையே மாற்றி வைக்க முடியாதா?

தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இயந்திரங்களை இன்னும் செம்மைப்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளை வரவேற்கலாம். உதாரணத்துக்கு, வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும் விவிபிஏடி இயந்திரம், இவிஎம் பயன்பாட்டின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கக்கூடும்.

அதைவிடுத்து, ஒரு தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்ட பின்னர் மீண்டும் பழைய முறைக்கு மாற வேண்டுமானால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பிருக்கிறது என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும்.

வெறும் யூகத்தின் அடிப்படையிலும் மேற்கத்திய நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நம்பவில்லை என்ற காரணத்தால் மட்டுமே மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவது தீர்வாகாது. தேர்தல் என்பது மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா. அதை குளறுபடிகள் இல்லாமல் சுமுகமாக நடத்தக் கோருவது வாக்காளர்கள், அரசியல் கட்சியினரின் உரிமை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு அத்தேர்தலை நியாயமாக நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதும் நிதர்சனம்.