சிபிஐயின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுமா?

இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ(CBI)-இன் உயரதிகாரிகள் இடையிலான மோதல் நகைப்புக்குரிய விஷயம் இல்லை. ஆனால், சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் இடையிலான பிரச்சனை, நையாண்டி செய்யப்படுகிறது.


தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அலோக் வர்மா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அலோக் வர்மாவுக்கு சாதகமானதாக இல்லாவிட்டாலும், அது அரசின் முகத்தில் அறைவதாகவே இருக்கிறது.

முக்கியமான வழக்குகளை விசாரிக்கும்போது, அதற்கு தனது ஜூனியரான ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றார் என்ற புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதற்கு நியாயம் கேட்டு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

செல்வந்தரும் அதிகாரம் மிக்க தொழிலதிபரும், இறைச்சி ஏற்றுமதியாளருமான மொயின் குரேசி மற்றும் பல முக்கியமானவர்கள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை அடையாளம் கண்டு, வெளிப்படுத்துவதற்கு முன்னதாக அவரை சிபிஐயில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று அலோக் வர்மாவுக்கு எதிராக சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஒரு பின்னணியும் இருக்கிறது. குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, சர்ச்சைக்குரிய பல முக்கியமான வழக்குகளை, அதிலும் குறிப்பாக போலீசார் தொடர்புடைய வழக்குகளை கையாண்டவர். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோதி பதவியில் இருந்தபோது, கரசேவகர்கள் பயணித்த ரயில் தீவைக்கப்பட்ட (கோத்ரா ரயில்) வழக்கை விசாரித்தவர் ஆஸ்தானா.

2014ஆம் ஆண்டு மோதி பிரதமரான பிறகு, அஸ்தானாவில் பெயர் இடைக்கால இயக்குநராக பரிந்துரைக்கப்பபட்டது. ஆனால் தான் இயக்குநரான பிறகு, அஸ்தானா ‘சூப்பர் தலைவராக’ தன்னைவிட வலிமையுள்ளவராக செயல்பட விரும்புவதை அலோக் வர்மா விரைவிலேயே உணர்ந்துவிட்டார். மத்திய அரசின் தலைமை அஸ்தானாவுக்கு ஆதரவாக இருந்ததே அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

சிபிஐ சுயேட்சையான அமைப்பாக இருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்துக்கு பதிலளிக்கும் பொறுப்பு கொண்டது. சிபிஐ விசாரணை செய்யும் வழக்குகளில் சுமார் 3% வழக்குகளில்தான் குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதால், அதை விமர்சனம் செய்வதற்கான அவசியம் இல்லை. 13 வயது சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கு (அவரது பெற்றோர் குற்றம்சாட்டப்பட்டனர்), ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்.ஜே.டி) தலைவர் லாலு பிரசாத் (தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்) வழக்கு போன்ற பல முக்கியமான வழக்குகளை சிபிஐ கையாண்டிருக்கிறது.

வியாபம் முறைகேடு வழக்கு போன்ற வழக்குகள் மந்தமாக செல்வதை சிபிஐ அமைப்பை விமர்சிப்போர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக, சிபிஐக்கு என்று பொதுமக்களிடையே ஒரு மதிப்பு இருக்கிறது. அதனால்தான், உள்ளூர் போலீசார் விசாரணையில் நம்பிக்கை ஏற்படாவிட்டால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

சிபிஐ, தற்போது அரசுடன் சமரசம் செய்து கொண்டிருப்பது தெரிகிறது. வர்மாவிற்கும் அஸ்தானாவிற்கும் இடையிலான மோதலில் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட எம்.நாகேஷ்வர் ராவ், சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி.) நியமனம் செய்து, குற்றச்சாட்டுகளையும், அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்க வேண்டும். அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானாவைத் தவிர வேறு பல அதிகாரிகளும் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த விசாரணையில் சாட்சிகளாகலாம்.

அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து, தங்களால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் மேற்பார்வைில் விசாரணை நடத்தி, 14 நாட்களுக்குள் சிவிசி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வர ராவ், எடுக்கும் முடிவுகள் பற்றி சீலிடப்பட்ட உறையில் நவம்பர் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவர் வழக்கமான நிர்வாகப் பணிகளைத் தவிர, கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதாரணமாக, சிபிஐ கையாளும் லாலு பிரசாத்தின் மகள் மிசா, பண மோசடியில் ஈடுபட்ட வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. லாலு பிரசாத் ரயில்வேத் துறை அமைச்சராக இருந்தபோது ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்குகளும் விசாரணையில் இருக்கின்றன. தனக்கு எதிரான வழக்கு தொடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை, இது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து தெரிவித்துவந்தார். இதில் ஆதாரம் இல்லை என்று இதற்கு முன்பு பதிலளித்திருந்தாலும், சாட்சிகளை உருவாக்க முடியும் என்று தற்போது கூறப்படும் நிலையில் நிலைமைகள் மாறலாம். ஒருவேளை பிற வழக்குகளிலும் சாட்சியங்கள் உருவாக்கப்பட்டவை என்று சொன்னால்…

அலோக் வர்மா காலவரையற்ற விடுப்பில் செல்லப் பணிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் போர் விமான பேரத்தில் நடந்த முறைகேட்டில் பிரதமர் நரேந்திர மோதியின் பங்கு பற்றி விசாரிக்காமல் தடுக்கவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, விடுப்பில் அனுப்பப்பட்டார் என்று கூறியிருக்கிறார். ஆனால் விஷயம் அதையும் தாண்டிவிட்டது. இது அரசின் திறமையின்மையை காட்டுகிறது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நான்கு நீதிபதிகள் ‘கலகம்’ செய்தனர். நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படுவதில் தீபக் மிஸ்ரா உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், வழக்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில் நீதி வழங்குவது என்பதைத் தவிர வேறு காரணிகளும் இருப்பதாக போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

தற்போதைய நிலையை அவதானித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வழக்கில் முகாந்திரம் ஏதாவது இருக்கிறதா என்பதற்கான விசாரணைதான் இது என்று தெரிவித்தார். நவம்பர் 12ஆம் தேதியன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அலோக் வர்மாவோ, ராகேஷ் அஸ்தானாவோ இந்த தீபாவளியை நிம்மதியாக கொண்டாடமாட்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக்கின் மேற்பார்வையில் இந்த விசாரணை நடக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது தான் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இதுவரை சிபிஐ நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற வழக்குகள் அனைத்தும் இப்போது நீதித்துறையால் மீளாய்வு செய்யப்படும். அதாவது அவற்றில் லஞ்சம் கொடுத்தோ அல்லது அரசியல் விருப்பங்களுக்கு ஏற்ப சாட்சியங்கள் வழங்கப்பட்டதா என்று ஆய்வு செய்யப்படும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டையை கொடுப்பதற்காக, மத்திய அரசின் முதன்மை செயலாளர், நிருபேந்திர மிஸ்ரா நேரில் சென்றார். ஆனால் உண்மையில் இக்கட்டான சூழலிலும் அவருக்கு ஆதரவாக இருப்பதை சொல்வதற்காகவே அவர் சென்றார். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டிற்கு சென்றாலும், அவரை சந்திக்க முடியவில்லை.

மத்திய அரசின் முதன்மைச் செயலரை சந்தித்தால், தான் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படலாம் என்பதாலேயே நிருபேந்திர மிஸ்ராவை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பார்க்காமல் தவிர்த்தார்.

தற்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசு எங்கே நிற்கவேண்டும் என்ற எல்லைக்கோட்டை வரையறுக்குமா என்பதை தெரிந்துக் கொள்ள நவம்பர் 12ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.